பட்டதாரி பெண்ணிடம் ரூ.5.25 லட்சம் மோசடி செய்த - நைஜீரியா இளைஞரிடம் பணம், லேப்டாப் பறிமுதல் :

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்லீன் மரியோ (25). விமான பணிப் பெண்ணான இவரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஆன்லைனில் ரூ.5.25 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஜெஸ்லீன் மரியோவை ஏமாற்றியது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த டைவோ அத்வேல் என்பது தெரியவந்தது. பெங்களூர் எலஹன்கா பகுதியில் பதுங்கியிருந்த டைவோ அத்வேலை கைது செய்த போலீஸார் புதுச்சேரி அழைத்து வந்து கடந்த 9-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாபட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து டைவோ அத்வேலை கடந்த 14-ம் தேதி காவலில் எடுத்த போலீஸார் 4 நாட்கள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஜெஸ்லீன் மரியோவிடம் மோசடி செய்த பணத்தில் ரூ.1.50 லட்சத்தை தவிரமீதி பணத்தை அவர் ஆடம் பர செலவிட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்த ரூ.1.50 லட்சத்தை மீட்ட போலீஸார் ஆன்லைன் மோசடிக்கு பயன் படுத்திய லேப்டாப், ஐபேடு, செல்போனை பறிமுதல் செய்தனர். 4 நாட்கள் காவல் முடிந்த நிலையில் அவரை நேற்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

இதனிடையே ‘‘சமூக வலைதள பணப்பரிவர்த்தனையை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். முன்பின் தெரியாத நபர்கள் தொடர்பு கொண்டு பணமோ, தகவல்களையோ கேட்டால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் கேட்டுக்கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE