ஆம்புலன்சில் வந்து வாக்களித்த மூதாட்டியிடம் அமைச்சர் நலம் விசாரிப்பு :

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் உடல்நலக் குறைவால் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த 86 வயது மூதாட்டியிடம் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் நலம் விசாரித்தார்.

மதுரை ஆரப்பாளையம் டி.டி.சாலையில் வசித்தவர் ராஜாமணி அம்மாள்(86). முதுமை காரணமாக இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அப்போது நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க அவர் விரும்பினார்.

இதையடுத்து ராஜாமணி அம்மாளை அவரது மகன் ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு ஆரப்பாளையம் தனியார் பள்ளி வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சக்கர நாற்காலியில் மூதாட்டியை அமர வைத்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.

தள்ளாத வயதிலும் ஜனநாயகக் கடமையாற்றிய ராஜாமணி அம்மாளை தேர்தல் அலுவலர்கள், அத்தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பாராட்டினர்.

இந்நிலையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அச்சம்பவத்தை மறக்காமல் தற்போது எஸ்.எஸ்.காலனியில் வசிக்கும் ராஜாமணி அம்மாளை தன் குடும்பத்தினருடன் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அவரிடம் பேசிய ராஜாமணி அம்மாள், அடுத்த தேர்தலிலும் ஓட்டுபோட வருவேன் என்றார்.

இதைத் தொடர்ந்து மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) என்பவர் மனைவி காளியம்மாள் சட்டப் பேரவைத் தேர்தல் நாளன்று இறந்து விட்டார். மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்வதை ஒத்தி வைத்துவிட்டு முதலில் வாக்களித்தார்.

மனைவி இறந்ததையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய பழனிசாமியை அமைச்சர் பாராட்டினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்