அரியலூர் மாவட்டத்திலுள்ள காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் குறுங்காடுகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
அரியலூரை அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சி பெரியார் நகரில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். எம்எல்ஏ கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியது: அரியலூர் மாவட்டத்தை பசுமையாக்கும் நோக்கில், அரியலூர் ஒன்றியம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சி பெரியார் நகரில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் தன்னார்வ அமைப்பின் ஒத்துழைப்புடன் மியாவாக்கி முறையில் தேக்கு, இலுப்பை, நாவல், புங்கன், வேம்பு, ஆலமரம், அத்தி உள்ளிட்ட 30 வகையான மரக்கன்றுகளும், மஞ்சள்அரளி, செம்பருத்தி, குண்டுமல்லி, செண்பகம், நந்தியாவட்டை, இட்லி பூ உள்ளிட்ட 10 வகையான பூச்செடிகளும் என 7,590 மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் நடப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், இம்மாவட்டத்தில் உள்ள காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களிலும் மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
நிகழ்ச்சியில், அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார், லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், ஜெயராஜ், செயல் அலுவலர் யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago