தேசூரில் நெல் கொள்முதல் செய்ததில் 159 விவசாயிகளுக்கு - ரூ.53.71 லட்சம் வழங்காமல் ஏமாற்றிய வியாபாரி கைது :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகையை கடந்த 3 மாதங்களாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய பதில் கிடைக்காததால், தேசூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தின் பிரதான கதவுக்கு பூட்டுப் போட்டு விவசாயிகள் கடந்த 15-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேளாண்மை விற்பனைக் குழு செயலாளர் மற்றும் காவல்துறைக்கு ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, நடத்தப்பட்ட விசாரணையில், சேத்துப்பட்டு பழம்பேட்டை அழகிரி தெருவில் வசிக்கும் வியாபாரி சீனிவாசன்(46) என்பவர் நெல் கொள்முதல் தொகையை வழங்காமல் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமாரிடம், மாவட்ட வேளாண் விற்பனைக் குழு செயலாளர் தர்மராஜ் அளித்துள்ள புகாரில், “சேத்துப்பட்டு பகுதியில் அரிசி வியாபாரம் செய்து வரும் சீனிவாசன் என்பவர், தேசூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த 7 ஆண்டுகளாக விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருகிறார்.

அந்த வகையில், கடந்த 05-05-2021-ம் தேதி முதல் 25-06-2021-ம் தேதி வரை 159 விவசாயிகளிடம் இருந்து 5,081 நெல் மூட்டைகளை கொள்முதல் செய்துள்ளார். அதற்கான தொகை 53 லட்சத்து 71 ஆயிரத்து 142 ரூபாயை உரிய காலத்துக்குள் விவசாயிகளுக்கு வழங்காமல் ஏமாற்றி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவுக்கு காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கை மோசடி செய்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அரிசி வியாபாரி சீனிவாசனை நேற்று கைது செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்