விபத்தில் துண்டான கை இணைப்பு காவேரி மருத்துவமனை சாதனை :

By செய்திப்பிரிவு

விபத்தில் 46 வயதான ஒருவரின் துண்டான கையை இணைத்து திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் டி.செங்குட்டுவன் செய்தியாளர்களிடம் கூறியது:

பாலத்திலிருந்து கீழே விழுந்த 46 வயதான ஒருவரது வலது முன் கை துண்டானது. ஏறத்தாழ 5 மணி நேரத்துக்கு பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

நுண் அறுவை சிகிச்சை மற்றும் மறு இணைப்புக் குழுவின் மருத்துவர்களான எஸ்.ஸ்கந்தா, எஸ்.சொக்கலிங்கம், கே.செந்தில்குமார், எம்.முரளிதாசன், ஆதில் அலி, பி.சசிக்குமார், எஸ்.நிர்மல்குமார், எம்.கலைவாணன் ஆகியோர் துண்டான கையை உடலுடன் இணைத்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

துண்டான கையை மறு இணைப்பு செய்வது மிகவும் கடினமானது. இந்த அறுவை சிகிச்சை ஒருசில மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த நோயாளி மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். துண்டான கையும் மிகவும் சிதைந்த நிலையில் இருந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் 5 மாதங்களில் துண்டான கை தற்போது நல்ல செயல்பாட்டுடன் இருக்கிறது.

நுண் அறுவை சிகிச்சை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதை மேற்கொள்வதற்கு அதிக நிபுணத்துவமும் சிகிச்சைக்கான உபகரணங்களும் தேவை. காவேரி மருத்துவமனையில் ஜீஸ் கினெவோ இயக்க நுண்ணோக்கி பயன்பாட்டில் உள்ளது.

ஐஸ் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பையின் உள்ளே மற்றொரு பிளாஸ்டிக் பையில் துண்டான பாகத்தை வைத்து விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்