குறைவானோர் பயிலும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை : ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி தகவல்

By செய்திப்பிரிவு

குறைவான மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி, புன்னம், வெள்ளியணை, சின்னமநாயக்கன்பட்டி, காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் இயங்கும் ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் விடுதிகளை மாநில ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

சின்னமநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், விடுதிகளில் ஆய்வு நடத்தி வருகிறோம். திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது, பள்ளிகளுக்கு என்னென்ன வசதிகள் தேவை, காலிப் பணியிடங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் 29 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளும், 19 விடுதிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் 2,266 மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். கடந்தாண்டு மாவட்டத்தில் 12,952 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.62 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 2 நடுநிலைப் பள்ளிகளில் 20-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். இங்கு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

கரோனா பாதிப்பால் பெற்றோர்கள் தற்போது அரசுப் பள்ளிகளை நாடி வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு மேலான பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்படும். சேதமடைந்துள்ள கட்டிடங்கள் சீரமைக்கப்படும் என்றார்.

ஆய்வின்போது, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க.சிவகாமசுந்தரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வ.சந்தியா, தாட்கோ மாவட்ட மேலாளர் பாலமுருகன், செயற்பொறியாளர் காதர்பாஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்