திருப்பத்தூர் மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் - வாழ்வாதாரம் மேம்பட வசதிகள் செய்து தரப்படும் : மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உறுதி

By செய்திப்பிரிவு

மலைவாழ் மக்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் விரை வாக செயல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நெல்லிவாசல் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட புலியூர் கிராமத்தில் 230 மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு பழங்குடியின மலையாளி ஜாதிச்சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப் பத்தூர்), தேவராஜ் (ஜோலார் பேட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பத்தூர் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை திட்ட விளக்கவுரை ஆற்றினார். முன்னதாக வட்டாட்சியர் சிவப் பிரகாசம் வரவேற்றார்.

மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மலைவாழ் மக் களுக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்கி பேசும்போது, ‘‘அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதனடிப்படையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக புதூர்நாடு, நெல்லிவாசல்நாடு, புங்கம்பட்டு நாடு ஆகிய மலை வாழ் மக்களின் கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளது.

சுமார் 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டது. அதில், 333 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு முதற்கட்டமாக தற்போது 230 நபர்களுக்கு பழங்குடியின மலையாளி ஜாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுத்து விரைவில் அவர்களுக்கும் ஜாதிச்சான்றிதழ் வழங்கப்படும்.

ஜாதிச்சான்று பெற்ற மாணவ, மாணவிகள் கல்வி, வேலை வாய்ப்பு, சுய தொழில், கடனுதவி ஆகியவை எளிதாக பெற முடியும். அரசின் இட ஒதுக்கீடும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு கிடைக்கும். இப்பகுதியில் துணை மின் நிலையம் அமைத்து சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதன் மீது தனி கவனம் செலுத்தி விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்.

அதேபோல, குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, பொது சுகாதாரம், கழிப்பறை, வேலை வாய்ப்பு, தொழிற்கடன் உள்ளிட்ட பல பிரச்சினைகளை மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர். அந்த வசதிகளும் விரைவாக செய்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

தடுப்பூசி பாதுகாப்பானது

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைய தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்கள் தடுப்பூசியை போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். தடுப்பூசி என்பது பாது காப்பானது, பக்க விளைவுகள் அற்றது. எனவே, மலைவாழ் மக்கள் கரோனா தடுப்பூசியை விரைவாக போட்டுக்கொள்ள வேண்டும். அதற்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன’’என்றார்.

இந்நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டாட்சியர் ரேவதி, வருவாய் ஆய்வாளர் தமிழ்செல்வி, கிராம நிர்வாக அலுவலர்கள் மணிகண்டன், அத்தீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்