கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக - சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் ரத்து :

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் நேற்று ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் குறிப்பிட்ட நேரம் வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா, ஆனி மாத திருமஞ்சன தரிசன விழா ஆகியவை வெகுவிமரிசையாக நடைபெறும். ஆனி திருமஞ்சன விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக விழா நடத்திட மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் பக்தர்கள் இன்றி சுவாமி உலா கோயில் உள்பிரகாரத்திலேயே நடைபெற்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற இருந்த பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.அதே நேரத்தில் வழக்கமாக தேரோட்டத்தின் போது நடராஜருக்கு கோயிலுக்கு உள்ளே நடைபெறும் பூஜைகள் பக்தர்கள் இன்றி நேற்று நடந்தது. பின்னர் நடராஜரும்  சிவகாம சுந்தரி அம்மாளும் ஆயிரங்கால் மண்ட முகப்பில் எழுந்தருளினார்கள். சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதணை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கீழ கோபுர வாயில் வழியாக நீண்ட வரிசையில் சென்ற பக்தர்கள் ஆயிரங்கால் மண்டப முகப்பில் இருந்த நடராஜர்,  சிவகாம சுந்தரி அம்மாளையும் தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.தொடர்ந்து தரிசன நாளான இன்று (ஜூலை 15) ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். பின்பு மாலை 3 மணியிலிருந்து இரவு 10 மணி வரை பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்