திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் அதன் தலைவர் திண்டுக்கல் எம்.பி., ப.வேலுச்சாமி, துணைத் தலைவர் கரூர் எம்.பி., ஜோதிமணி ஆகியோர் தலைமையில் நடந்தது.
திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் முன்னிலை வகித்தார். மத்திய அரசின் திட்டங்கள் சரியாக நிறைவேற்றப்படுவதை மாவட்ட அளவில் கண்காணித்து ஆலோசனைகள் வழங்குவது மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவின் பணியாகும்.
அதன்படி மத்திய அரசின் திட்டங்களான அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம், ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டம், எம்.பி., நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள். பிரதமரின் கிராம சாலைத்திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களைச் செயல்படுத்தியது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 2020-21-ம் ஆண்டுக்கு 344 குக்கிராமங்களில் 355 பணிகள் 53,383 இணைப்புகள் வழங்க ரூ.38.39 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கியது. அதில் 221 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு எம்.பி.,க்கள் வேலுச்சாமி, ஜோதிமணி ஆகியோர் அறிவுறுத்தினர்.
மத்திய அரசின் திட்டங்களை தாமதமின்றி விரைந்து நிறைவேற்றி மக்கள் பயனடையும் வகையில் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தினேஷ்குமார் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago