பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு - திருச்செங்கோடு சார்பதிவாளர் மாற்றப்படுவார் : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

திருச்செங்கோடு சார்பதிவாளார் உடனடியாக மாற்றப்படுவார் என பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, பத்திரப்பதிவு அலுவலரிடம், “தற்போது எந்த எண் டோக்கனுக்கு பத்திரப் பதிவு நடைபெற்று வருகிறது” என அமைச்சர் கேட்டார்.

மேலும், “8-ம் எண் டோக்கனுக்கு பதிவு செய்யாத நிலையில் 20-ம் எண் டோக்கன் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது” என அமைச்சர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அங்கு இருந்த இடைத்தரகர் ஒருவரை அமைச்சர் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எங்கெங்கே பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்களோ அந்த பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு செய்து வருகிறோம். திருச்செங்கோடு அலுவலகத்தில் வேண்டியவர்கள் என்று யாரை நினைக்கிறார்களோ அவர்களின் பத்திரங்களை மட்டுமே பதிவு செய்கிறார்கள். பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள் எனத் தெரியவந்தது.

இதுபோல நடக்கக்கூடிய அலுவலகங்களில் ஆய்வு செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். உறுதியாக திருச்செங்கோடு சார்பதிவாளர் உடனடியாக மாற்றப்படுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, பதிவுத்துறை துறை அரசு செயலர் ஜோதி நிர்மலா சாமி, பதிவுத்துறை தலைவர் சிவனருள், கூடுதல் பதிவுத்துறை தலைவர் நல்லசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்