வருங்காலத்தில் நானோ தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என டெல்லி ஐஐடி இயக்குநர் வி.ராம்கோபால் ராவ் தெரிவித்தார்.
திருச்சி சந்தானம் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி சார்பில் தேசத்தை கட்டமைப்பதில் பொறியியல் மற்றும் பொறியாளர்களின் பங்கு என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது. கருத்தரங்குக்கு பள்ளிச் செயலாளர் கே.மீனா தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை செயல் அலுவலர் கு.சந்திரசேகரன், இயக்குநர் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராம்கோபால் ராவ் பேசியது: பொறியியல் என்பது பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண்பது. பொறியாளர் என்பவர் மின் சாதனம், இயந்திரம், கட்டுமானம் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவராக இருக்கிறார்.
பொறியியலை உருவாக்கியவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளே. அறிவியல் துறையில் நோபல் பரிசுகள் இருப்பது போல் பொறியியல் துறையில் இல்லை.
செல்போன்களில் முன்பைவிட அதிகமான தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. பொறியியல் தொழில்நுட்பத்தின் மூலம் உடலில் உள்ள செல்களின் வளர்ச்சியைக் கணிக்க முடிகிறது. மனித உடலில் உள்ள ஐம்பொறிகள் செய்யும் செயல்களைப் போலவே செல்போனில் பல்வேறு திறன்களை உணரக்கூடிய தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ளன.
புற்றுநோயை குணப்படுத்தும் ரேடியேஷன் சிகிச்சையில் நானோ தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும். வருங்காலத்தில் நானோ தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்த வளர்ச்சியையும், மாற்றத்தையும் உருவாக்கும். தொழில்நுட்பத் துறையில் பொறியியலின் பங்கு இன்று உயர் நிலையை எட்டியுள்ளது என்றார். தொடர்ந்து மாணவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர் பதிலளித்தார்.
இந்த கருத்தரங்கில் மதி இந்திரா காந்தி கல்லூரி, ஜெயேந்திரா மெட்ரிக். பள்ளி, சங்கரா மெட்ரிக் பள்ளி மற்றும் சந்தானம் வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். முன்னதாக பள்ளியின் முதுநிலை முதல்வர் பத்மா சீனிவாசன் வரவேற்றார். நிறைவாக முதல்வர் வி.பொற்செல்வி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago