சட்டவிரோத கருக்கலைப்பால் - பெண் உயிரிழந்த வழக்கில் மேலும் 7 பேர் கைது :

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த வசந்தகுமார்(30). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த திருமணம் ஆகாத 27 வயது பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டது. இதில் அந்தப் பெண் கர்ப்பமானார்.

இதையடுத்து கருவை கலைக்க அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அடுத்த ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் கிருஷ்ணவேணி(41) என்பவரை வசந்தகுமார் அணுகினார்.

இதையடுத்து, ஆண்டிமடம் அருகேயுள்ள அன்னங்காரங்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் அந்தப் பெண்ணுக்கு கிருஷ்ணவேணி கடந்த 10-ம் தேதி மாலை கருக்கலைப்பு செய்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணுக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் சிறிதுநேரத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணவேணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, உயிரிழந்த பெண் கர்ப்பமாக காரணமாக இருந்த வசந்தகுமார், கருக்கலைப்பு செய்ய வீட்டில் அனுமதி வழங்கிய கிருஷ்ணவேணியின் உறவினர் பொற்செல்வி (50), கருக்கலைப்பில் எடுக்கப்பட்ட சிசுவை முந்திரி காட்டில் புதைக்க உடந்தையாக இருந்த கிருஷ்ணவேணியின் தம்பி கர்ணன்(36), மற்றும் வசந்தகுமாரின் அண்ணன் சஞ்சய் காந்தி (32), சந்தோஷ்குமார் (29), திருமூர்த்தி (27), கலாவதி (55) ஆகியோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE