திருச்செங்கோடு அருகே ஏமப்பள்ளி ஊராட்சியில், கடந்த ஆண்டு கரோனா தாக்கத்தின்போது மக்களை காக்க பொதுநலப் பணி மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் முடிவு செய்தனர். இதன்படி கபசுரக் குடிநீரை கிராம மக்கள் தயாரித்து ஏமப்பள்ளி மட்டுமின்றி அருகே உள்ள கிராம மக்களுக்கும் தொடர்ச்சியாக வழங்கி வந்தனர். தொடர்ந்து 100 நாட்கள் கசாயம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா இரண்டாவது அலையின்போது ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து கடந்தாண்டு போலவே கபசுரக் குடிநீரை கிராம மக்கள் இலவசமாக வழங்கினர். 75 நாட்கள் தொடர்ச்சியாக வழங்கி வந்தனர். கடைசி நாளான நேற்று உடலுக்கு புத்துணர்ச்சியை தரக்கூடிய ஆட்டுக்கால் சூப் வைத்து இலவசமாக வழங்கினர். இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி அருந்தினர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், கரோனா பிடியில் இருந்து பொதுமக்களை காக்க கபசுரக் குடிநீர் இலவசமாக வழங்க கிராம மக்கள் அனைவரும் முடிவு செய்தோம்.
இதற்கான நிதி எங்களுக்குள் வசூலித்து தேவையான பொருட்களை வாங்கி கபசுரக் குடிநீர் வழங்கி வந்தோம். நேற்றுடன் 75 நாட்கள் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று மக்களுக்கு ஆட்டுக்கால் சூப் வைத்து இலவசமாக வழங்கினோம். மக்களும் ஆர்வமுடன் வாங்கிப் பருகினர், என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago