வானில் செவ்வாய்க் கோளும், வெள்ளிக் கோளும் அருகருகே தெரியும் நிகழ்வை இன்று (ஜூலை 13) மாலை வெறும் கண்களால் பார்க்கலாம் என திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கம் தெரிவித்துள்ளது
இதுகுறித்து கோளரங்கின் திட்ட இயக்குநர் அகிலன் கூறியது: வான் மண்டலத்தில் நடக்கும் அரிய நிகழ்வுகளை நாம் காணும் போது தனி உற்சாகம் பிறக்கும். அவ்வாறான ஒரு அற்புதக்காட்சி இன்று (ஜூலை 13) மாலை நிகழவுள்ளது. வானில் நடைபெறும் பல்வேறு அரிய நிகழ்வுகள் நம் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் இன்று நடைபெறவுள்ள நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம்.
அதாவது பூமி சூரியனை சுற்றிவரும் தளத்தை ஒட்டியே கோள்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கோளுக்கும் இடையில் உள்ள தூரம் மாறுபடும். அவ்வாறு தத்தமது பாதையில் கோள்களில் பயணித்துக் கொண்டிருக்கும் போது, அருகில் உள்ள கோள் தொலைவில் உள்ள கோளை முந்திச் செல்வது போல் தெரியும். அப்போது இவற்றுக்கு இடைப்பட்ட கோணம் ஒரு டிகிரிக்கும் குறைவாக இருக்கும்.
இன்று (ஜூலை 13) மாலையில் சூரியன் மறைந்த பிறகு மேற்கு திசையின் அடிவானத்தில் ஒளி பொருந்திய வெள்ளிக் கோள் தெரியும். தொலைதூரத்தில் உள்ள செவ்வாய்க்கோள் ஒளி குறைவாக வெள்ளிக்கோளுக்கு அருகில் இருப்பது போன்று தோன்றும். இந்த காட்சியை நம் வெறும் கண்களால் பார்க்கலாம்.
இதேபோன்று இதற்கு முன்பு 24.08.2019 அன்று வெள்ளியும், செவ்வாயும் அருகருகே தெரியும் காட்சி நிகழ்ந்தது. அதன் பிறகு இன்று நடைபெறவுள்ளது என அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago