திருச்சி மாவட்டத்தில் ஜிகா காய்ச்சல் பாதிப்பு இல்லை : மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் ஜிகா காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.

டெங்கு, ஜிகா வைரஸ் போன்ற மழைக்கால மற்றும் இதர மழைக்கால நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம், சுகாதாரம், மாநகராட்சி உள்ளிட்ட அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பேசியது: ஆர்என்ஏ வகையைச் சேர்ந்த ஜிகா வைரஸ், ஏடிஸ் எஜிப்டி வகை கொசுக்கள் மூலம் ஏற்படுகிறது. ஏடிஸ் எஜிப்டி வகை கொசு கடித்த நபருக்கு ஒரு வாரத்துக்குப் பிறகே அதிக காய்ச்சல், உடலில் தடிப்பு, மூட்டு வலி, தலைவலி, உடல் வலி மற்றும் கண்கள் சிவந்து காணப்படுதல் ஆகிய அறிகுறிகள் தென்படும். கர்ப்பிணிகள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் குறைபாடுடன் கூடிய (சிறிய தலையுடன்) குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தற்போது ஜிகா காய்ச்சலால் யாரும் பாதிக்கப்படவில்லை. கேரளத்தில் 18 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், அங்கிருந்து வரும் நபர்களை 2 வாரங்களுக்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை அல்லது சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதேவேளையில், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் மருந்துக் கடைகளிலோ, போலி மருத்துவர்களிடமோ சிகிச்சை பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஜிகா மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிக்காக தற்காலிக பணியாளர்கள் 670 பேர் மூலம் கொசு ஒழிப்பு மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முதல்வர் கே.வனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்