தமிழகத்தை பிரிப்பது தொடர்பான தகவல் வதந்தி : பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கருத்து

By செய்திப்பிரிவு

தமிழகத்தைப் பிரிப்பது தொடர்பாக வெளியான தகவல் வதந்தியே என்று என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் குரு பூஜை நடந்தது. அவரது உருவப் படத்துக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மத்திய அரசைவிட, மாநில அரசே அதிக வரி வருவாய் பெறுகிறது. எரிபொருள் விற்பனையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு ஏற்கெனவே சம்மதம் தெரிவித்துள்ளது. ஆனால் மாநில அரசுகள் ஏற்க வில்லை.

திமுக அரசுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால், தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்க வேண்டும். ஜெய்ஹிந்த் என்ற கோஷமே தமிழகத்தில் இருந்து தான் வந்தது. அதை கொச்சைப்படுத்தி பேசுவதை முதல்வர் எப்படி வேடிக்கை பார்க்கிறார் என்று தெரிய வில்லை.

அவதூறாகப் பேசும் திண்டுக்கல் லியோனியை பாடநூல் கழகத் தலைவராக நியமித்திருப்பது தமிழக ஒருமைப்பாட்டைக் குலைக்கும் செயல். தமிழகத்தை பிரிக்கப் போவதாக வெளியான தகவல் வதந்தி. அது குறித்து பிரதமரோ, மத்திய உள்துறை அமைச்சரோ எதுவும் கூறவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்