சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் - ஆடித்தபசு திருவிழா நாளை கொடியேற்றம் : பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறுகிறது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா நாளை (13-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பக்தர்கள் பங்கேற்பின்றி திருவிழா நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்தபசு விழா மிகவும் பிரசித்தி பெற்றது. 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் கோமதி அம்மன் வீதியுலா நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு 11-ம் நாள் இரவு 12 மணியளவில் நடைபெறும். அப்போது கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக சுவாமி காட்சி கொடுப்பார்.

இதைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம்.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் ஆடித்தபசு திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா நாளை (13-ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

நாளை காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் கோமதி அம்மன் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் அம்மன் சிவிகையில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வரும் வைபவம் நடைபெறுகிறது.

தினமும் காலையும், இரவும் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. திருவிழா சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை திருவிழா நடைபெறும் 12 நாட்களும் காலை 8 மணிக்கு மேல் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

அதே போல் இரவு 7.30 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் கோயிலில் ஆடிச்சுற்று சுற்றுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்