திருச்சி முக்கொம்பு காவிரி மேலணையில் உள்ள 41 மதகுகளின் கான்கிரீட்டால் ஆன எதிர் எடைகளையும், அவற்றை ஏற்றி- இறக்க பயன்படும் இரும்புச் சங்கிலிகளையும் ரூ.15 கோடியில் புதிதாக மாற்றி அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையில் உள்ள 4-வது மதகின் கான்கிரீட்டால் ஆன எதிர் எடையில் (counter weight) நேற்று முன்தினம் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அதை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த அணையில் கடந்த ஜனவரி மாதம் 15-வது மதகின் எதிர் எடை சேதமடைந்து மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், அணையின் 35, 36 ஆகிய மதகுகளின் எதிர் எடைகளும் மாற்ற வேண்டிய நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள் கூறியது: முக்கொம்பு காவிரி மேலணையில் மதகின் 15-வது எதிர் எடை ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது 4-வது எதிர் எடை மாற்றப்பட்டு வருகிறது.
இந்த அணை கட்டப்பட்டு 43 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அவ்வப்போது மதகுகளின் எதிர் எடைகள் சேதமடைந்து வருவதால், அணையில் உள்ள 41 மதகுகளின் கான்கிரீட்டால் ஆன எதிர் எடைகளை அகற்றிவிட்டு இரும்பில் அமைக்கவும், மதகுகளை ஏற்றி- இறக்க பயன்படும் இரும்புச் சங்கிலிகளை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை ரூ.15 கோடியில் மேற்கொள்ள திட்டமிட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் முடிவுக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago