கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் - செண்பகத்தோப்பு அணையில் உபரி நீரை வெளியேற்ற முடிவு : பொதுமக்களுக்கு பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ஜவ்வாதுமலையில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், செண்பகத் தோப்பு அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் வெளியேற்றப்படலாம் என பொதுப்பணித் துறை எச்சரித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத் தில் கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. ஜவ்வாது மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், மலையடிவாரத்தில் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

சந்தவாசல் அடுத்த படைவீடு அருகே உள்ள செண்பகத் தோப்பு அணையின் உயரம் 62.32 அடியாகும். அணைக்கு கடந்த 3 நாட்களாக நீர்வரத்து உள்ளது. விநாடிக்கு 100 கனஅடி நீர்வரத்து இருந்த நிலையில், நேற்று காலை விநாடிக்கு 211 கனஅடியாக உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 52.41 அடியை கடந்துள்ளது. 287 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில் 193 மில்லியன் கனஅடி அளவில் தண்ணீர் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுப்பணித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பொதுப் பணித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “செண்பகத்தோப்பு கிராமத்தில் உள்ள கமண்டல ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள செண்பகத் தோப்பு அணையின் மூலம் போளூர், ஆரணி, செய் யாறு, வந்தவாசி மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு வட்டங்களில் உள்ள 48 ஏரிகள் வழியாக 7,497 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

அணைக்கு நீர்வரத்து அதி கரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டும் போது, அணையில் இருந்து வெள்ள உபரி நீர் வெளியேற்றப்படும். ஒழுங்குமுறை வழிகாட்டுதலின்படி, அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக அப்படியே வெளியேற்றப்படும்.

10-ம் தேதி (நேற்று) காலை நிலவரப்படி, 52.41 அடியை எட்டியுள்ளது. நீர்வரத்து தொடர்வதால், 55 அடியை விரைவாக எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. அப்போது, நீர் வரத்துக்கு ஏற்ப வெளியேற்றப் படும் தண்ணீரின் அளவு உயர்த் தப்படும்.

செண்பகத்தோப்பு அணையில் இருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படும் போது, அதன் பாசனக் கால்வாய் அமைந்துள்ள வழித்தடத்தில் இருக்கும் கிராமங்களான படைவீடு, மல்லிகாபுரம், புஷ்பகிரி, சந்த வாசல், ராமாபுரம் மற்றும் கமண்டல ஆறு மற்றும் கமண்டல நாக நதியின் இருபுறமும் தாழ்வானப் பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறையை கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவிக் கப்பட்டுள்ளது.

தண்டோரா மூலம் எச்சரிக்கை

இதற்கிடையில், ஜவ்வாது மலையில் பெய்து வரும் கனமழையால் கமண்டல ஆறு மற்றும் கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். கிராமங்களில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. தண்ணீரின் வேகம் அதிகமாக உள்ளதால், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

கலசப்பாக்கத்தில் 37 மி.மீ., மழை

தி.மலை மாவட்டத்தில் 2-வது வாரமாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் சராசரியாக நேற்று காலை நிலவரப்படி 18 மி.மீ., மழை பெய்தது. மேலும், ஆரணி பகுதியில் 31 மி.மீ., செய்யாறு 22, செங்கம் 27.2, ஜமுனாமரத்தூர் 25, வந்தவாசி 3.2, போளூர் 12.2, திருவண்ணாமலை 28, தண்டராம்பட்டு 2.4, கலசப்பாக்கம் 37, சேத்துப்பட்டு 3.4, கீழ்பென்னாத்தூர் 1 மி.மீ., வெம்பாக்கம் 23.6., மழை பெய்துள்ளது. மேலும், சாத்தனூர் அணை பகுதியில் 3.6 மி.மீ., மற்றும் குப்பநத்தம் அணை பகுதியில் 5.4 மி.மீ., மழை பெய்துள்ளதாக பதிவாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்