நாமக்கல்லில் இரு குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம் :

நாமக்கல் மாவட்டத்தில் நடக்கயிருந்த இரு குழந்தைத் திருமணங்களை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கும், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடப்பதாக சமூக நலத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கு சென்று, திருமணத்தை தடுத்து நிறுத்தினர். திருமணம் நடத்த இருந்த குழந்தை மீட்கப்பட்டு, மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல், நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த 6-ம் தேதியன்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த திருமணமும் தடுத்து நிறுத்தப்பட்டதோடு, திருமணங்களை ஏற்பாடு செய்தவர்களின் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தின்படி, 18 வயது நிறைவடையாத பெண் குழந்தைக்கோ, 21 வயது நிறைவடையாத ஆணுக்கோ திருமணம் செய்வது குற்றமாகும். இதனை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE