அங்ககச் சான்று பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட வேளாண் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட வேளாண் துறை அலுவலகம்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பது:
விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இயற்கை வழி விவசாயத்தில் விதை உற்பத்தி, அறுவடை, விளை பொருட்கள் விற்பனை வரை அனைத்து நிலைகளிலும் கடைபிடிக்க வேண்டிய சில தர நிர்ணயங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இயற்கை விளைபொருட்கள் உற்பத்தி செய்தல், பதனிடுதல் மற்றும் விற்பனைக்கு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை திட்டத்தின்படி அபீடா நிறுவனத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையில் அங்ககச்சான்று எனப்படும் இயற்கை வேளாண் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
அங்ககச்சான்று பெற தனி நபராகவோ அல்லது குழுவாகவோ பதிவு செய்யலாம். மேலும் வனபொருட்களை சேகரிப்பு செய்பவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். பெரு வணிக நிறுவனங்களும், அங்கக பொருட்களை பதப்படுத்துவோர் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம்.
தனி நபர், சிறு குறு விவசாயிகள் எனில் ரூ.2,700, தனி நபர் பிற விவசாயிகள் எனில் ரூ.3,200, குழுப்பதிவு எனில் ரூ.720, வணிக நிறுவனம் எனில் ரூ.9,400 பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
அங்ககச் சான்றிதழ் பெற பண்ணையின் பொது விவர குறிப்புகள், பண்ணையின் வரைபடம், மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர் திட்டம், நில ஆவணம், வருமான வரி கணக்கு எண் அட்டை, ஆதார் அட்டை, புகைப்படம் மற்றும் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட அங்ககச் சான்று ஆய்வாளர்கள், விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago