ஆரணி சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வரும் - கனமழையால் பல ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின : விவசாயிகள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பெய்து வரும் கனமழையால் பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதில், ஆரணி பகுதியில் மட்டும் 3 நாட்கள் இடைவெளியில் கன மழை கொட்டித் தீர்த்துள்ளது. ஆரணி மற்றும் சுற்றுப்புற பகுதி களில் நேற்று முன்தினம் இரவு கொட்டித் தீர்த்த கனமழையால், தாழ்வான இடங்கள் மற்றும் விவசாய நிலங்களில் மழை நீர் சூழ்ந்து குளம்போல் தேங்கி யுள்ளன. ஆரணி பகுதியில் கடந்த 6-ம் தேதி காலை நிலவரப்படி 84.5 மி.மீ., மழை பெய்திருந்த நிலையில், நேற்று காலை நிலவரப்படி 115.5 மி.மீ., மழை பெய்துள்ளது. தொடர் மழையால் நீர்பிடிப்புப் பகுதிகள் நிரம்பி வருகின்றன.

ஆரணி அடுத்த காமக்கூர் பாளையம், நடுக்குப்பம், முள்ளிப்பட்டு, மலையாம்பட்டு, புங்கம்பாடி உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்து கொண்டது. பல ஏக்கர் விவசாய நிலங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந் துள்ளன. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “ஓர் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கன மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்து விட்டன. சேதமடைந்துள்ள நெற்பயிர்களுக்கு தமிழக அரசிடம் இருந்து இழப்பீடு பெற்று தர வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்

ஆரணி நகரம் விஏகே நகர், ஜெயலட்சுமி நகர், தேனருவி நகர், பாஸ்கர் நகர் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும், மழை நீர் வெளியேற வழி இல்லாததால் தாழ்வாக உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி சராசரியாக 44.69 மி.மீ., மழை பெய்துள்ளது. செய்யாறு பகுதியில் 18 மி.மீ., செங்கம் பகுதியில் 59, ஜமுனாமரத்தூர் 74, வந்தவாசி 6, போளூர் 43.4, திருவண்ணாமலை 24, தண்டராம்பட்டு 55.6, கலசப் பாக்கம் 48.6, சேத்துப்பட்டு 25.6, கீழ்பென்னாத்தூர் 23, வெம் பாக்கம் பகுதியில் 43 மி.மீ., மழை பெய்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து

மேலும், சாத்தனூர் அணை பகுதியில் 42.6 மி.மீ., மற்றும் குப்பநத்தம் அணை பகுதியில் 34 மி.மீ., மழை பெய்துள்ளது. ஜவ்வாதுமலையில் பெய்துள்ள கன மழையால், செண்பகத்தோப்பு அணைக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 100 கனஅடி தண்ணீர் வருகிறது. 62.32 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 50.18 அடியாக உள்ளது. அணையில் 173 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்