சிவகங்கை மாவட்டத்தில் - பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் வீடு கட்ட 1,200 பேர் மறுப்பு : மன உளைச்சலில் ஒன்றிய மேற்பார்வையாளர்கள்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் 1,200 பேர் வீடு கட்ட மறுப்பதால் ஒன்றிய மேற்பார்வையாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் வீடு கட்ட மத்திய, மாநில அரசுகள் ரூ.2.40 லட்சம் மானியம் வழங்குகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் பிரதமர் குடியிருப்புத் திட்டத்தில் 2016-17-ம் ஆண்டில் இருந்து 2019-20 வரை 7,145 பேருக்கு வீடுகள் கட்ட அனுமதி வழங்கப் பட்டது. ஆனால் இதுவரை 5,224 பேர் மட்டுமே வீடு கட்டியுள்ளனர். மொத்தம் 1,921 பேர் வீடு கட்டி முடிக்காமல் உள்ளனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வருகின்றனர். ஆனால் 1,200 பேர் வீடு கட்ட மறுத்து வருகின்றனர்.

இதில் பலர் அடித்தள பணிகூட தொடங்க முன்வரவில்லை. சிலர் வீடுகளை கட்டி பணம் இல்லாமல் பாதியில் விட்டுவிட்டனர். ஆனால் அனைத்து வீடுகளையும் விரைவில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒன்றிய மேற்பார்வையாளர்களுக்கு உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் அவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

இதுகுறித்து ஒன்றிய மேற்பார் வையாளர்கள் கூறியதாவது: தற்போது கழிப்பறையுடன் 300 சதுர அடி வீடு கட்டி முடிக்க ரூ.6 லட்சம் தேவைப்படும். அரசு மானியம் குறைவாக இருப்பதால் பலர் வீடு கட்ட மறுக்கின்றனர். மேலும் 2011-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பின்படி வீடு ஒதுக்கப்படுகிறது. அதில் உள்ள பலர் வீடு கட்ட தயாராக இல்லை. ஆனால் அவர்களுக்கு வீடு கட்ட அனுமதி கொடுத்து முதல் தவணையாக ரூ.25 ஆயிரம் கொடுத்து விடு கின்றனர். பணத்தை கொடுத்தாலும் வீடு கட்ட மறுக்கின்றனர்.

சிலரது வங்கி கணக்குக்கு பணம் சென்றுவிட்டது. ஆனால் அவர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் வாரிசுகளின் பெயரில் வீடு கட்ட அனுமதியில்லை. இந்த குழப்பத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் கட்டாமல் உள்ளன. ஆனால் அதிகாரிகள் எங்களுக்கு நெருக்கடி கொடுப்பதால் மன உளைச்சலாக உள்ளது, என்றனர்.

இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இப்பிரச்சினை மாநிலம் முழுவதும் உள்ளது. பலமுறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டோம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்