அதிக குழந்தை பெற்றுக்கொள்வதில் கொல்லிமலை 2-வது இடம் : தனிக்குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தமிழக அளவில் பெண்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் கொல்லிமலை 2-வது இடம் வகிப்பதால் அங்கு தனிக்குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.

நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக சுகாதாரத் துறையினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், ஒரு சில பகுதிகளில் விழிப்புணர்வு குறைவாக உள்ளது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி ஆகிய பகுதியில் விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக மாவட்ட நிர்வாகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த கிராம சுகாதாரச் செவிலியர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு அங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் கூறியதாவது:

கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களில் பெண்கள் இரு குழந்தைகளுக்கு மேல் பிரசவிக்கின்றனர்.

இதில் கொல்லிமலை தமிழக அளவில் 2-வது இடம் வகிக்கிறது. இதுதொடர்பாக கொல்லிமலை, நாமகிரிப்பேட்டை, எருமப்பட்டி பகுதியில் அந்தந்த கிராம சுகாதாரச் செவிலியர்கள், கிராம நிர்வாக அலுவலர், தன்னார்வலர்களைக் கொண்ட குழு அமைத்து வீடு தோறும் சென்று இரு குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை விற்பனை, குழந்தைத் திருமணம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்