திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, ஆதிதிராவிடர் களிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியருக்கு, தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம், தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலாளர் ச.கருப்பையா நேற்று முன்தினம் அளித்துள்ள மனுவில், “ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிட மக்களுக்கு நிபந்தனையின் பேரில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்கள் வழங்கப்பட்டது. இதில், தி.மலை மாவட்டத்தில் அதிகளவில் பஞ்சமி நிலங்கள் வழங் கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆதிதிராவிட சமூகத்தைச் சாராத பல தனி நபர்களால், பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
தண்டராம்பட்டு வட்டம் மலமஞ்சனூர் கிராமத்தில் கல்குவாரிகளும் மற்றும் நெடுஞ்சாலைத் துறையால் ஆக்கிரமிக்கப்பட்டு, பேருந்து நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. மேலும், அதே கிராமத்தில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் கட்டப்பட்டுள்ளது. திருவண்ணா மலை அடுத்த தேனிமலையில் 4.17 ஏக்கர் பஞ்சமி நிலம் தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தண்டராம்பட்டு வட்டம் கொழுந் தம்பட்டு கிராமத்தில் 1.22 ஹெக்டேர் நிலம், பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே கிராமத்தில் தனி நபர் மூலம் 23 சென்ட் பஞ்சமி நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வந்தவாசி அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் 98 சென்ட் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து, பிற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகள் கட்டியுள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் வந்த வாசி வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
செங்கம் அடுத்த கொட்டகுளம் கிராமத்தில் மூன்றரை ஏக்கர் பஞ்சமி நிலம், வருவாய்த் துறையின் ஆவணத்தில் பிற சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவர் அனுபவித்து வருகிறார். தனி நபர்கள் மற்றும் அரசு மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, மீண்டும் ஆதிதிராவிடர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago