கரோனா அலை ஏற்படுத்தியுள்ள பொருளாதார சரிவால், பெற்றோர் பலரும் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்துவதில் சிரமம், 2 ஆண்டுகளாக வகுப்பறை கற்றல் இல்லாமல் செலுத்தப்பட்ட கட்டணம், அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் இலவச சலுகைகள் போன்றவை பெற்றோர்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 36 அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
பெரியகுளம் அருகே சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2015-16-ம் கல்வியாண்டில் 423 மாணவர்கள் படித்தனர். இந்தக் கல்வியாணடில், மாணவர் சேர்க்கை திடீரென 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
ஆசிரியர், மாணவர் விகிதம் 1:40 என்ற அளவைக் கடந்துள்ளதால், வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, அல்லிநகரம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து சில்வார்பட்டி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மோகன் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் மடிக்கணினி, சைக்கிள், பாடப்புத்தகம், அட்லஸ் உள்ளிட்ட 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. கல்விக் கட்டணமும் இல்லை. மேலும் அரசுப் பள்ளியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலைகளில் சேர பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. இது பெற்றோர்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றார்.
இதை உணர்ந்த சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை வழங்காமல் தாமதம் செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இருப்பினும் மாணவர்களின் பிறப்புச் சான்று, ஆதார் அட்டை போன்ற ஆவணங்களை வைத்து அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
வழக்கத்தை விட கூடுதல் சேர்க்கையால் சில அரசு பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சில்வார்பட்டி அரசு பள்ளியில் கூடுதலாக 24 வகுப்பறைகள் தேவை. இதையடுத்து
இதையடுத்து தலைமையாசிரியர் மோகன் தலைமையிலான ஆசிரியர்கள் பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமாரை சந்தித்து கூடுதல் வகுப்பறை அமைத்துத் தரக்கோரி மனு அளித்தனர்.
உடன் உதவித் தலைமை ஆசிரியர் வெள்ளையன், ஆசிரியர்கள் வெங்கடேசன், செந்தில்குமார், பாலமுரளி ஆகியோர் இருந்தனர்.
கடந்த ஆண்டுகளில் அரசு பள்ளிகள் மீதும், ஆசிரியர்கள் மீதும், தேர்ச்சி சதவீதம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago