மர்ம விலங்கு கடித்து ஆடுகள், கோழிகள் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

வேலூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் ஆடு, கோழி, வாத்து உள்ளிட்டவை தொடர்ச்சியாக உயிரிழந்து வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி செல்வகுமார் (52). இவர், தனது வீட்டை யொட்டியுள்ள விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் கொட்டகை அமைத்து அங்கு ஆடு, கோழி மற்றும் வாத்து ஆகியவைகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி ஆடு மற்றும் கோழிகளுக்கு தீவனம் வைக்க கொட்டகை பகுதிக்கு சென்றபோது அங்கு 11 கோழிகள், 4 வாத்துக்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இதைக்கண்ட செல்வகுமார் அதிர்ச்சியடைந்து உயிரிழந்த கோழியை பார்த்தபோது அதன் உடலில் காயம் இருந்தது.

எனவே, வெறிநாய் கடித்திருக்கலாம் என அவர் எண்ணினார். இருந்தாலும், கடந்த சில நாட்களாக கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடு, கோழி, வாத்து உள்ளிட்டவைகளை செல்வகுமார் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தார். குறிப்பாக, இரவில் அவ்வப்போது வெளியே வந்து ஆடு, கோழிகளை அவர் பார்த்துவிட்டு சென்றார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோழவரம் சுற்றுவட்டாரப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால், இரவு நேரத்தில் செல்வகுமார் வீட்டில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று காலை கொட்டகைக்கு வந்து பார்த்தபோது அங்கு 3 ஆடுகள், 4 வாத்துகள், 5 கோழிகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன.

உயிரிழந்த கால்நடைகளில் கழுத்து மற்றும் வயிற்றுப்பகுதிப்பகுதியில் மர்ம விலங்கு கடித்த காயம் இருந்ததால் மர்ம விலங்கு அப்பகுதியில் சுற்றித்திரிவதாகவும், ஆள் இல்லாத நேரம் மற்றும் இரவு நேரங்களில் கால்நடைகளை அந்த விலங்கு வேட்டையாடி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சோழவரம் பகுதியில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்