வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் - 36 கி.மீட்டர் தொலைவுக்கு கால்வாய் தூர்வார நடவடிக்கை : ஒரு வாரக்காலத்தில் பணிகள் முடிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கால்வாய்களும் முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. வேலூர் மாநகராட்சிப் பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் 4 மண்டலங்களிலும் தாழ்வானப்பகுதிகளில் மழை நீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது.

சில இடங்களில் மழைநீர் வீடுகளுக்குள் நுழைந்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், கன்சால்பேட்டை, முள்ளிப்பாளையம், சேண்பாக்கம், ரங்காபுரம், வள்ளலார், சத்துவாச்சாரி, தென்றல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆணையர் சங்கரனுக்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குறிப்பாக குடியிருப்புப்பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் செல்வதை தடுக்கவும், தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் குட்டைப்போல் தேங்குவதை தடுக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் நிக்கல்சன் காய்வாய் உள்ளிட்ட அனைத்து நீர்வரத்து கால்வாய்களையும் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன. வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட சத்துவாச்சாரி, ரங்காபுரம், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணிகளை மாநகர நல அலுவலர் சித்ரசேனா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, 2-ம் மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சங்கரன் கூறும்போது, ‘‘வேலூரில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தடையின்றி செல்ல கால்வாய் அனைத்தும் தூர்வார உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட கிட்டத்தட்ட 36 கி.மீட்டர் தொலைவுக்கு அனைத்து கால்வாய்களும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ஒவ்வொரு பகுதியிலும் கூடுதலாக பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு கால்வாய் தூர்வாரும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஒரு வாரகாலத்துக்குள் அனைத்து கால்வாய்களும் முழுமையாக தூர்வாரப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்