தென்பெண்ணையாற்றில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நேற்று திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ராமசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஜி.என்.தர்மேந்திரன், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்டச் செயலாளர் ஆ.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மார்க்கண்டேய நதி மற்றும் யார்கோள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி தடுப்பணைகள் கட்டியுள்ளதை கண்டித்தும், மாநிலங்களுக்கு இடையே நீர் பங்கீடு குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்படும் போக்கை கண்டித்து, உடனடியாக சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள அணைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசு தென்பெண்ணை மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் பேசினர். நிறைவாக விவசாய சங்கத்தின் வட்டச் செயலாளர் ஏழுமலை நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கர்நாடகா அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்