லால்குடி அருகே பலத்த மழையால் 3 கிராமங்களில் - வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் : வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார அமைச்சர் உத்தரவு

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை காரணமாக புள்ளம்பாடி ஒன்றி யத்தில் 3 கிராமங்களில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு, மழைநீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வார உத்தரவிட்டார்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் தெரணிபாளையம், நல்லூர், நம்புக்குறிச்சி ஆகிய கிராமங்களில் 150-க்கும் அதிகமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, லால்குடி எம்எல்ஏ அ.சவுந்தரராஜன், கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை அங்குள்ள பள்ளிக் கட்டிடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்ந்து, நேற்று காலை மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, மழையால் பாதிக்கப்பட்ட பகுதி களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மழையால் பாதிக் கப்பட்ட பகுதிகளை உடனடி யாக சீரமைக்கவும், மழைநீர் வடிகாலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவும், சிறுகளப்பூரில் இருந்து நந்தி யாறு வரை ஏற்கெனவே தூர்வாரப்பட்ட வடிகாலுடன் இணைத்து நந்தியாற்றில் மழை நீர் தங்கு தடையின்றி சேர உரிய நடவடிக்கை எடுக்கவும் பொதுப்பணித் துறை அலுவலர் களுக்கு அமைச்சர் கே.என்.நேரு உத்தரவிட்டார்.

மேலும், பாதிக்கப்பட்ட சாலை களைச் சீரமைக்கவும், புதிதாக சாலை அமைக்கவும், தேவைப் படும் இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கவும், தெரணிபாளையம் ஏரியைப் பலப்படுத்தவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மணப்பாறையில் 91 மிமீ மழை

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): மணப்பாறை 91, வாத்தலை அணைக்கட்டு 90.60, நவலூர் குட்டப்பட்டு 79.20, பொன்மலை 79, விமான நிலையம் 65.20, துறையூர், துவாக்குடி தலா 50, திருச்சி நகரம் 47, பொன்னணியாறு அணை 46, திருச்சி ஜங்ஷன் 45.20, மருங்காபுரி 42.40, லால்குடி 42.20, புலிவலம் 40, முசிறி 31, கோவில்பட்டி 29.20, சமயபுரம் 26.40, தென்பரநாடு 24, நந்தியாறு தலைப்பு 21.20, தேவிமங்கலம் 15, சிறுகுடி 12, கொப்பம்பட்டி 10.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்