கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் உட்பட தென்மாவட்டங்களில் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.
தமிழகத்தில் கரோனா தொற்றின்2-வது அலை வேகமாக பரவியதைதொடர்ந்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது, தொற்று குறைந்ததை தொடர்ந்து தமிழக அரசு கடந்த சில வாரங்களாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி நேற்று முதல் மேலும் சில புதிய தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 70 நாட்களுக்கு பிறகு நேற்று தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்குசாயரட்சை, இரவு ராக்கால அபிஷேகம், ஏகாந்த தீபாராதனை நடந்தது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முகக்கவசம் அணிந்தபக்தர்கள் மட்டும், கோயில் கலையரங்கில் அமர வைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் தரிசனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முடிகாணிக்கை செலுத்தவும், காது குத்தவும் அனுமதிக்கப்பட்டனர்.
அதேநேரத்தில், தேங்காய் உடைத்து வழிபடவும், கடல் மற்றும்நாழிக்கிணற்றில் நீராடவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடற்கரை மற்றும் நாழிக்கிணறு பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோயில்கள், தூத்துக்குடி சிவன் கோயில், பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் நேற்று திறக்கப்பட்டு வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் திருப்பலியில், 30 குடும்பங்கள் வீதம் டோக்கன் கொடுக்கப்பட்டு, அவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். அதேநேரத்தில், விழாக்கள் ஏதும்நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய நேற்று காலை 5-30 மணி முதல் அனுமதிக்கப்பட்டது. அனைத்து பக்தர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.மேலும், உடல்வெப்பநிலையை பரிசோதனைசெய்த பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று கோயில் நடை திறக்கப்படும் முன்பாகவே, அதிகாலை முதல் பக்தர்கள் காத்திருந்து கோயிலுக்குள் சென்றனர். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் இந்து முன்னணி சார்பில்இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை கோயிலை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியும் மேற் கொள்ளப்பட்டது.
தென்காசி
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில், இலஞ்சி குமாரர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், அனைத்து மசூதிகளும் திறக்கப்பட்டு, தொழுகை நடந்தது. தனிமனித இடைவெளியை கடைபிடித்து முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நாகராஜா கோயில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில், வேளிமலை குமாரசுவாமி கோயில் என, அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன.தெர்மல் ஸ்கேனர் மூலம்உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். நாகராஜா கோயிலுக்கு பெண் பக்தர்கள் அதிகளவில் வந்த நிலையில், நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட அனுமதிக்கப் படவில்லை.
நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பூங்காக்கள் 54 நாட்களுக்கு பின்னர் திறந்திருந்தன. ஆனால் குறைந்த அளவு மக்களே பூங்காக்களுக்கு வந்திருந்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் நேற்று காலை8.30 முதல் 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 11.30 மணிக்கு உச்சிகால பூஜைகள் முடிந்தவுடன் நடை அடைக்கப்பட்டது. மாலை சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர் 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அர்ச்சனை செய்யப்படவில்லை.நாகராஜா கோயிலுக்குபெண் பக்தர்கள் அதிகளவில் வந்தநிலையில், நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட அனுமதிக்கப் படவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago