புதுக்கோட்டை எரிவாயு தகனமேடை ரூ.6.5 லட்சத்தில் மேம்பாடு : நேரடியாக காஸ் மூலம் எரியூட்டும் வசதி

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை எரிவாயு தகன மேடையில் நேரடியாக எரிவாயு மூலம் எரியூட்டும் வகையில் ரூ.6.5 லட்சத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை போஸ் நகரில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையை ரோட்டரி தொண்டு அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இங்கு நேரடியாக எரிவாயு பயன்படுத்தாமல், விறகுகளை எரித்து, அதில் இருந்து காஸ் உற்பத்தி செய்து சடலங்கள் எரியூட்டப்பட்டு வந்தன.

கரோனா தொற்று காலத்தில் அதிக எண்ணிக்கையில் சடலங்கள் எரியூட்டப்பட்டதால் தகன மேடையில் புகையும் அதிகமாக வெளியேறியதோடு, அடிக்கடி உபகரணங்களும் பழுதடைந்தன. இதையடுத்து, இங்கு விறகுகளைப் பயன்படுத்தாமல் நேரடியாக எரிவாயு மூலம் எரியூட்டும் வகையில் ரூ.6.5 லட்சத்தில் எரிவாயு தகன மேடை மேம்படுத்தப்பட்டது.

இதை, ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

முன்னதாக, புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் 654 பேருக்கு ரூ.3.97 கோடியில் தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை, 25 பெண்களுக்கு தையல் இயந்திரம், திருநங்கைகள் 22 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர் ரேணுகா, கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்