வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் உட்பட 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வெளி மாநில மதுபாட்டில்கள் விற்பனையில் ஈடுபடுவோர்களை கண்காணித்து கைது செய்ய தனிப்படை அமைக் கப்பட்டது.
இந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஜடையனூர் பகுதியில் தனிப்படை காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அதேபகுதியைச் சேர்ந்த செந்தூரபாண்டியன் (30) என்பவர் வெளிமாநில மதுபாட்டில்களை தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரை காவல் துறையினர் கைது செய்து அவரிடம் இருந்து 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல, நாட்றாம்பள்ளி அடத்த வேட்டப்பட்டு பகுதியில் தனிப்படை காவல் துறையினர் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதே பகுதியில் உணவகம் நடத்தி வரும் சாந்தா (45) என்பவர் தனது உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, சாந்தாவை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்து 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், நாட்றாம்பள்ளி அடுத்த ஆத்தூர் குப்பம் பகுதியில் தனிப்படை காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அதேபகுதியில் சிக்கன் பக்கோடா கடை நடத்தி வந்த சுகுணா (44) என்பவர் தனது கடையில் கர்நாடகா மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அதன்பேரில், சுகுணாவை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த 46 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, சைதாப்பேட்டை முருகன் கோயில் அருகே கமலாம்மாள் (76) என்ற மூதாட்டி 100 மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
அதன்பேரில், அந்த மூதாட்டியிடம் இருந்த மதுபாட் டில்களை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான காவல் துறையினர் கொண்டப்பள்ளி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அதேபகுதியைச் சேர்ந்த மரியா (30), சேட்டு (42), தனலட்சுமி (34), கார்த்திக் (33) ஆகியோர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து, அந்த 4 பேரையும் குடியாத்தம் கிராமிய காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 லிட்டர் சாராய பாக்கெட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago