சின்ன சொக்கிகுளத்தில் சிக்கி திணறும் வாகனங்கள் : மதுரை கோகலே சாலையின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணப்படுமா?

By என்.சன்னாசி

மதுரை சின்ன சொக்கிகுளம் பகு தியில் நடைபெறும் பறக்கும் பால பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் கோகலே சாலையில் செல்லும் வாகனங்கள் திணறி வருகின்றன.

கோரிப்பாளையம் மற்றும் தல்லாகுளம் பகுதிகளிலிருந்து நத்தம் சாலை, அழகர்கோவில் சாலை மற்றும் மேலூர் சாலை களுக்குச் செல்லும் வாகனங்கள் இந்த ஒருவழிப்பாதையில்தான் செல்ல முடியும். ஏற்கெனவே இச்சாலையில் பிடிஆர் சிலை அருகே ஏற்படும் நெருக்கடியைக் குறைக்க சாலையை அகலப்படுத்த மாநகராட்சி முயன்றது. அங்குள்ள தனியார் வர்த்தக மையம் தொடர்ந்த வழக்கால் அப்பணி கிடப்பில் இருந்தது.

ஆனால் நத்தம் சாலையில் கட்டிவரும் பறக்கும் பாலம், மாநகராட்சி அலுவலக மேற்கு நுழைவாயில் முன்பும், கோகலே சாலையிலும் இறங்குவதால் அப்பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. ஊரடங் கால் பணி தொய்வில் உள்ளது. இதனால் தனியார் வர்த்தக மையம் முன்பு காலை, மாலை யில் நெரிசல் ஏற்படுகிறது. தற் போது ஊரடங்கு தளர்வால் அச்சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. ஷேர் ஆட் டோக்கள் அங்கு குறுக்கும் நெடுக்குமாக செல்வதால் வாகன ஓட்டுநர்கள் திண்டாடுகின்றனர்.

இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது: கோகலே சாலையில் விசால்டிமால் அருகே தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற் படுகிறது. அந்த இடத்தில் சாலையை அகலப்படுத்தினால் மட்டுமே நிரந்தரத் தீர்வு ஏற்படும். காவல் ஆணையர், எஸ்பி அலுவலகங்கள், ஆட்சியர், நீதிபதிகள் குடியிருப்புகள் உட்பட அரசுத்துறையினர் குடியிருப்புகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக இருந்தும் இந்த இடத்தின் பிரச்சினை சரிசெய்யப்படாமல் உள்ளது.

காவல்துறையினர், அதிகாரிகள் நினைத்தால் வேறு வழியைப் பயன்படுத்தி சென்று விடலாம். ஆனால் சாமானிய மக்களுக்கு இந்தச் சாலையைத் தவிர வேறு வழியில்லாததால் இப்பகுதியில் வாகனங்கள் இடையூறு இன்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மாரியப்பன் கூறியதாவது: இச்சாலையில் தனியார் வர்த்தக மையம் அருகே சாலையை அகலப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற் போது தடை நீக்கப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைந்தாலும், 80 சதவீத வாகனங்கள் இந்தச் சாலை வழியாகச் செல்லவே அதிக வாய்ப்புள்ளது. எனவே இங்கு சாலையை அகலப்படுத்த மேம்பால கட்டுமானப் பொறியாளர்களிடம் பேசியுள்ளோம். அவர்களும் அகலப்படுத்துகிறோம் என உத்தரவாதம் அளித்திருந்தாலும், இதற்கான பணி தாமதமாகிறது. பிடிஆர் சிலை, வர்த்தக மையம் அருகே போலீஸார் நிறுத்தப்பட்டு, போக்குவரத்து தடையின்றி செல்ல உரிய ஏற்பாடுகளை செய்கி றோம். இருப்பினும் வாகன போக்குவரத்து அதிகரிப்பால், அவ்விடத்தில் ஏற்படும் இடையூறை தவிர்க்க, மாட்டுத்தாவணி, மேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகளை கோரிப்பாளை யத்தில் இருந்து பனகல் சாலை, ஆவின், மேலமடை சந்திப்பு வழியாக திருப்பிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரிரு நாளில் அந்த இடத்தில் வாகன நெருக்கடி ஓரளவுக்கு குறையும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்