குருமலை மலைக் கிராமத்தில் இரண்டு படுக்கைகளுடன் கூடிய தற்காலிக மருத்துவ மையம் ஓரிரு நாளில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் அணைக் கட்டு தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெல்லக்கல், நச்சுமேடு ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இங்கு, சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாத தால் எவ்வித அடிப்படை வசதியும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
குருமலை மலை அடிவாரத்தில் இருந்து மேலே செல்ல சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலை வுக்கு முறையான சாலை வசதி இல்லாததால் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த மலைக் கிராமங்களுக்கு சாலை அமைக்க ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு ஆண்டுகளாகியும் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
இதற்கிடையில், குருமலை மலைக் கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பவுனு (37) என்பவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மலையில் இருந்து கீழே வர டோலியில் அவரை கட்டி தூக்கி வந்துள்ளனர். அவருக்கு வழியிலேயே பிரசவம் ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், மலை அடிவாரத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக் கப்பட்டார்.
இந்த தகவலை அடுத்து குருமலை மலைக் கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘குரு மலைக்கு சாலை அமைக்கும் பணிகள் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. அதிக பாரம் ஏற்றும் வாகனங்கள் மேலே செல்ல முடியாத சூழல் இருப்பதால் சிறிய ரக வாகனங்களை கொண்டு பணிகள் தொடங்க உள்ளன. இந்தப் பணிகளை மூன்று மாதங்களில் முடிக்கப்படும். குருமலைக்கு செல்லும் சாலை ஒரு இடத்தில் செங்குத்தாக உள்ளது. இதற்கு, பதிலாக 500 மீட்டர் தூரத்தில் மாற்றுப்பாதை அமைக்கலாம் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அவசர உதவிக் காக தற்போதைக்கு இரண்டு படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவ மையம் அங்கு அமைக்கப்படும். இங்கு, ஒரு செவிலியர், ஒரு மருத்துவர் இருப்பார்கள். மலைப் பகுதியில் ஒரு ஆம்புலன்ஸ்நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக குடியிருப் புகள் உள்ள பகுதியில் சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி விரைவில் அமைக் கப்படும்.
விடுபட்டவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கப்படும். இந்த ஆய்வு தொடர்பாக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். மலைக் கிராமத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களை தொடர்ந்து கண்காணித்து பிரசவ தேதிக்கு 5 நாட்களுக்கு முன்னதாகவே ஊசூர் ஆரம்ப சுகாதர நிலையத் துக்கு அழைத்து செல்லப் படுவார்கள்’’ என்றார்.
இந்த ஆய்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகவள்ளி, ராஜலட்சுமி, வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார், அணைக்கட்டு வட்டாட்சியர் பழனி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago