திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் - மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் நுழைந்ததால் மக்கள் அவதி :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் வீட்டுக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு, சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒரு சில வார்டுகளில் கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு வசதிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூரில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருவதால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் நுழைந்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 29-வது வார்டு, திருப்பத்தூர் - சேலம் கூட்டுச்சாலையில் அமைந்துள்ள அண்ணாநகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள மக்கள் கூலிவேலை, கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மிகவும் அவதிக்குள்ளாகி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து மேலும் அவர்கள் கூறும்போது, ‘‘ மழைக்காலங்களில் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் நுழைந்து விடுகிறது. இதனால், இரவில் உறக்கமின்றி வீட்டுக்குள் நுழைந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் அனைவரும் ஈடுபட்டு வருகிறோம். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளது. சாலை முழுவதும் மழைநீருடன், கழிவுநீர் தேங்கி குட்டைப்போல் தேங்கியுள்ளது.

அதிலேயே சென்று வருகிறோம். இதற்கான தீர்வை நகராட்சி நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘அண்ணாநகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் மின்மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில், கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்