திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட மூன்று வார்டுகளில் தூய்மைப்பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 27, 28 மற்றும் 29 ஆகிய வார்டுகளில் குப்பைக்கழிவுகள் அகற்றப்படாமலும், பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு குழாய்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். சுகாதார சீர்கேட்டை போக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதனுக்கு எம்எல்ஏ நல்லதம்பி அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் உத்தரவின்பேரில், 20-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர்கள் நகராட்சிக்கு உட்பட்ட 3 வார்டுகளில் நேற்று தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் உள்ள கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. அப்பகுதியில் குவிந்திருந்த குப்பைக்கழிவுகள் அகற்றப்பட்டன. அதேபோல, பாதாள சாக்கடை இணைப்பு குழாயில் இருந்த உடைப்புகள் சரி செய்யப்பட்டு அங்கு தேங்கியிருந்த கழிவுநீர் உடனடியாக அகற்றப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago