சின்னசேலம் அரசு மருத்துவ மனையில் மாவட்ட ஆட்சியர் நேற்று ஆய்வு செய்தார்.
சின்னசேலம் அரசு மருத்துவ மனையில் புறநோயாளிகள் பிரிவு, கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் கையிருப்பு குறித்து ஆட்சியர் பி.என்.தர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பிவைக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
செங்குந்தர் நகர் முதல் தெரு மற்றும் இரண்டாம் தெருக்களில் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல் கண்டறியும் முன்கள பணியாளர்களின் கணக்கீட்டு பணியினை ஆய்வு செய்தார். சின்னசேலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை ஆய்வு செய்தார்.
இதையடுத்து மேல்நாரி யப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கச்சி ராப்பாளையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தார். பிரசவித்த தாய்மார்களிடம் மருத்துவ சிகிச்சை முறையின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் புறநோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உறவினர்களிடம் கரோனா மூன்றாம் கட்ட பரவலை எதிர்நோக்க தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, சின்னசேலம் வட்டாட்சியர் விஜயபிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் என்.மதியழகன், சின்னசேலம், கச்சிராப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர்கள் எஸ்.சந்திரகுமார், ஆறுமுகம் மற்றும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago