சமூக சேவை செய்வதுபோல நடித்து - அரசு துறைகளை நம்ப வைத்த மதுரை காப்பக நிர்வாகி : குழந்தைகளை விற்ற விவகாரத்தில் சிக்கியது எப்படி?

By என்.சன்னாசி

சமூக சேவை செய்வதுபோல நடித்து காப்பகத்தை தொடங்கி குழந்தைகளை விற்பனை செய்த காப்பக நிர்வாகி சிவக்குமாரை போலீஸார் தேடி வரு கின்றனர்.

மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தொடக்கத்தில் சில பொது நலச் சேவையில் ஈடுபட்டதன் மூலம் காப்பகம் நடத்த அனுமதிக்கப்பட்டார். 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள சிவக்குமார், தனது செயல்களால் அதிகாரிகள், நன்கொடையாளர்களைக் கவர்ந்தார்.

மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே மாநகராட்சி இடத்தில் பழைய மருத்துவமனை கட்டிடத்தில் ‘இதயம் டிரஸ்ட்’ என்ற பெயரில் கடந்த மார்ச் மாதம் காப்பகம் தொடங்கினார். மதுரையில் சாலையோரங்களில் திரிந்த முதியோர், நோயால் பாதிக்கப்பட்டோர், கணவரை இழந்த, பிரிந்த ஆதரவற்றோர் என 35 ஆண்களும், 38 பெண்களும், தாய்மார்களுடன் கூடிய 11 குழந்தைகளும் தங்கியிருந்தனர். இவர்களுக்கு உணவு, மருத்துவம் போன்ற உதவிகளை நன் கொடையாளர்கள் மூலம் சிவக்குமார் வழங்கினார். இக்காப்பகத்தில் சிவக் குமாருடன், மதர்சா, கலைவாணி உள் ளிட்ட ஊழியர்கள் பணிபுரிந்தனர்.

இந்நிலையில், மேலூர் அருகிலுள்ள சேக்கிப்பட்டியைச் சேர்ந்த கணவரை இழந்த ஐஸ்வர்யா என்ற பெண் மூன்று குழந்தைகளுடன் சில மாதங்களுக்கு முன்பு இந்த காப்பகத்தில் சிவக்குமாரின் நண்பர் அசாருதீன் பரிந்துரையில் சேர்க்கப்பட்டார். ஐஸ்வர்யாவின் ஒரு வயது ஆண் குழந்தை இரு நாட்களுக்கு முன்பு கரோனாவால் உயிரிழந்ததாக காப்பக நிர்வாகம் அசாருதீனுக்கு தகவல் தெரிவித்தது. இது தொடர்பாக அசாருதீன் அரசு மருத்துவமனையில் விசாரித்தபோது ஒரு வயது குழந்தை தொற்று பாதிப்பில் இறக்கவில்லை என தெரியவந்தது.

தகவல் அறிந்த மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவின் பேரில் விசாரணை தொடங்கியது. தத்தனேரி மயானத்துக்கே சென்று குழந்தை புதைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாநகராட்சி முத்திரை கொண்ட ரசீது அடிப்படையில் காப்பக ஊழியர் கலைவாணியிடம் காவல் துறையினர் விசாரித்தனர்.

விசாரணையில், மதுரை இஸ்மாயில்புரம் 4-வது தெருவைச் சேர்ந்த நகைப்பட்டறை உரிமையாளர் கண்ணன்- பவானி தம்பதிக்கு புரோக்கர் ராஜா மூலம் ரூ.2 லட்சத்துக்கு ஐஸ்வர்யா வின் குழந்தையை விற்பனை செய்தது தெரிய வந்தது.

மேலும், காப்பகத்தில் தங்கியிருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தேவியின் 2 வயது பெண் குழந்தை செல்வி என்ற புரோக்கர் மூலம் மதுரை சக்கிமங்கலம் கல்மேடு பகுதியைச் சேர்ந்த சகுபர் சாதிக்-அனீஸ்ராணி தம்பதிக்கு விற்றுள்ளனர். புரோக்கர்கள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் கமிஷனாக காப்பக நிர்வாகம் கொடுத் ததும் தெரியவந்தது.

மதுரை நகர் துணை ஆணையர் பி.தங்கத்துரை தலைமையில் கூடுதல் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வாளர்கள் ஹேமாமாலா, செல்வக்குமார் அடங்கிய தனிப்படையினர் குழந்தைகளை வாங்கிய கண்ணன் - பவானி, சகுபர் சாதிக்- அனீஸ்ராணி தம்பதிகள், காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, புரோக்கர்கள் ராஜா, செல்வி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான காப்பக நிர்வாகி சிவக்குமார், ஊழியர் மதர்சாவை தனிப்படையினர் மதுரை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடுகின்றனர்.

இது தொடர்பாக துணை ஆணையர் தங்கத்துரை கூறியதாவது:

காப்பகத்துக்கு அரிசி, காய்கறி விநியோ கம் செய்ய வந்த ராஜா ஐஸ்வர்யா வின் குழந்தையை விற்பனை செய்ததில் புரோக்கராகச் செயல்பட்டுள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த தேவி மொழிப்பிரச்சினையால் தனது குழந்தை மாயமானது குறித்து அவரால் விசாரிக்க முடியவில்லை. காப்பகத்தில் தங்கி யிருந்த சரண்யா என்பவர் குழந்தை விற்பனையைக் கண்டித்தும் அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

குழந்தைகளை வாங்கிய தம்பதியரின் வீடுகளுக்கே சென்று பேரம் பேசி விற்றுள்ளனர். ஏற்கெனவே இது போன்ற செயல்களில் காப்பக நிர்வாகி சிவக்குமார் ஈடுபட்டுள்ளாரா என விசாரிக்கிறோம்.

மாட்டுத்தாவணி உள்ளிட்ட மேலும் இரு இடங்களில் உள்ள அவரது அலு வலகம் மூடப்படும். தலைமறைவான சிவக்குமாரையும் அவரது ஊழியர் மதர்சாவையும் பிடித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.

குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டிராஜா கூறுகையில்,‘‘ குழந்தைகள் தத்தெடுப்பு, வளர்ப்பு மற்றும் குழந்தை களுக்கு எதிரான குற்றச் செயல்கள் குறித்து குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். குழந்தையில்லாத தம்பதிகளிடம் அதிக பணம் பறிக்கும் நோக்கில் சட்டத்துக்குப் புறம்பாக இச்சம்பவம் நடந்திருக்கிறது. குழந்தை இல்லாத நபர்கள் தனி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். அரசுத் துறைகளை அணுகினால் முறையாக குழந்தை தத்தெடுப்புக்கு உதவி செய்வோம்,’’ என்றார்.

காப்பகத்துக்கு சீல்

ஆட்சியர் அனீஷ்சேகர் கூறியது: மதுரையில் ஒரு வயது ஆண் குழந்தை இறந்தது குறித்து முரண்பட்ட தகவலால் காப்பக பெண் ஊழியரிடம் விசாரித்தபோது, அந்த குழந்தை விற்கப்பட்டதும், அடுத்து ஒரு பெண் குழந்தை விற்கப்பட்டதும் தெரிந்து மீட்கப்பட்டுள்ளது. இதயம் டிரஸ்ட் காப்பகத்தில் தங்கியிருந்த 100 பேரை வேறு காப்பகங்களுக்கு மாற்றியுள்ளோம். சட்டவிரோதச் செயலில் ஈடுபட்ட காப்பகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

காப்பக உரிமையாளர் சிவக்குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையிலுள்ள அனைத்துக் காப்பகங்களிலும் குழந்தைகள் நலக்குழு அடங்கிய சிறப்புக் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இச்சம்பவத்தில் போலி ஆவணம் தயாரிப்பில் அரசு ஊழியர்களுக்கு தொடர்பு இருந்தால் நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்