கண்ணமங்கலம் அருகே கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த அனந்தபுரம் ஊராட்சி அர்ஜுனாபுரம் புதூர் கிராமத்தில் வசித்தவர் ‘பொக்லைன்’ ஓட்டுநர் கண்ணன்(35). இவரது மனைவி இந்துமதி (27). இவர்களுக்கு உமாதேவி (8), விக்னேஷ்(5) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் நள்ளிரவு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் தம்பதியினர் இருந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “கணவன், மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவரம் அவர்களது குழந்தைகள் மூலம் தெரியவருகிறது.
அதன்பிறகு என்ன நடந்தது என குழந்தைகளுக்கு தெரிய வில்லை. அவர்கள் உறங்கி விட்டனர். குடும்பத் தகராறு காரணமாக இந்துமதி தூக் கிட்டு முதலில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அதனால் பதற்றமடைந்த கண்ணனும் அதே சேலையில் தூக்கிட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.
தாய், தந்தை இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து குழந்தைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் அப்பா, அம்மா என அழைத்தும் பலனில்லை.
குடும்பத் தகராறு காரணமா? அல்லது வேறு காரணம் உள்ளதா? எனவும் விசாரணை நடத்தி வருகிறோம். பிரேதப் பரிசோதனையின் அறிக்கைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றனர்.
இது குறித்து இந்துமதியின் தந்தை சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago