தென்மேற்கு பருவமழைக் காலமான தற்போது தென்காசி மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
தமிழகத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழைக் காலம் ஆகும். இந்த காலத்தில் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் மழை தொடங்கியது. இதனால் வெப்பம் தணிந்து குளுமை நிலவியது. தொடர் மழையால் அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் கார் பருவ நெல் சாகுபடி பணிகளைத் தொடங்கினர். குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக தென்காசி மாவட்டத்தில் மழையின்றி வெப்பம் அதிகரித்து வருகிறது. வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். பலத்த காற்றுடன் வெயில் சுட்டெரிப்பதால் பயிர்கள் விரைவில் வாடிவிடுகின்றன. ஒரு வாரம் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய பயிர்களுக்கு 3 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை இருப்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் வேலைச்சுமை ஏற்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் இரவில் குளிர்ந்த காற்று வீசுகிறது. குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து குறைவாக உள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக அருவிகளில் குளிக்க தடை நீடிப்பதால் குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago