ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் - வேலூர் மணிக்கூண்டு சீரமைக்கப்படும் : மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மணிக்கூண்டு சீரமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர் நேதாஜி மார்க்கெட் அருகில் உள்ள சாரதி மாளிகையில் 209 கடைகள், நேதாஜி மார்க் கெட்டில் 736 கடைகள், சுமார் 300-க்கும் அதிகமான தரைக்கடைகள் இயங்கி வருகின்றன. வேலூர் மாநகராட்சி பகுதியில் கரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் நேதாஜி மார்க்கெட் பகுதியில் உள்ள மொத்த வியாபாரம், சில்லறை கடைகள் இடமாற்றம் செய்யப் பட்டன.

இதற்கிடையில், கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் இட மாற்றம் செய்யப் பட்ட கடைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியை பின்பற்றி கடைகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மார்க்கெட் பகுதி முழுவதையும் நடந்தே சென்று ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘கரோனா காலம் என்பதால் மார்க்கெட்டில் கடைகளை திறந்தால் மக்கள் அதிகம் கூடுவார்கள். இதனால், கரோனா மீண்டும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மார்க்கெட் பகுதியில் கடைகளை திறப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மாநகராட்சி ஆணையரிடம் கூறப்பட்டுள்ளது. நேதாஜி மார்க்கெட்டை வேறு ஒரு திறந்தவெளி இடத்தில் திறக்க இடம் தேர்வு செய்யுமாறு கூறியுள்ளேன். சேதமடைந்துள்ள நேதாஜி மார்க்கெட் மணிக்கூண்டை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மண்டி தெருவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபாதைகள் அகலமாக கட்டப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அதனை அப்பறப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும்’’ என தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன், பொறியாளர் சீனிவாசன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா, வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஞானவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்