மதுரை பாண்டி கோயில் அருகே - சமூகவிரோத கூடாரமாக மாறும் ‘அம்மா திடல்’ : குற்றச்சம்பவம் நடக்கும் முன்பே தடுக்குமா போலீஸ்?

By என்.சன்னாசி

மதுரை பாண்டி கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து அவ்விடம் ‘அம்மா திடல்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

தற்போது இந்த மைதானம் இரவு நேரத்தில் சமூக விரோத கும்பல் கூடும் பகுதியாக மாறி வருகிறது. சாலையோரம் ஒதுக்குப்புறமாக இருப்பதாலும், சுற்றிலும் கருவேல மரங்கள் உள்ளதாலும் மது அருந்துவோர் அடிக்கடி கூடுகின்றனர். இவர்கள் கும்பலாக மது அருந்திவிட்டு, பாட்டில்களை மைதானத்தில் வீசி உடைத்துவிட்டுச் செல்கின்றனர். மேலும், காலை, மாலையில் பைக் ரேஸ் பழகுவோரும் இங்கு வருகின்றனர். அவர்கள் தங்களது வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை பொருத்தி, ஓட்டுகின்றனர்.

இந்த மைதானத்தில் இருந்து சுமார் 200 அடி தூரத்தில்தான் வண்டியூர் போலீஸ் புறக்காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு பணியில் இருக்கும் போலீஸார் கண்காணிக்க வேண்டும். மது அருந்துவோர் அடிக்கடி இப்பகுதியில் கூடுவதால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் முன்பே போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்