கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அனைத்து தொழில் நிறுவனங்களும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திரும்ப தொடங்கியுள்ளனர். இது தொழில் துறையினருக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில், வகை-1 என பட்டியலிடப்பட்டுள்ள கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட தொற்று பாதிப்பு அதிகம் இருந்த 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதோடு, இதர தொழிற்சாலைகள் அனைத்தும் 33 சதவீதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏற்பட்ட தொழில் முடக்கத்தாலும், கரோனா அச்சத்தாலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தங்கியிருந்த பீகார், உத்தரபிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் பெரும்பான்மையானோர் தங்களது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
தற்போது அனைத்து தொழில் நிறுவனங்களும் செயல்பட அரசு அனுமதியளித்துள்ளதால், விரைவில் 100 சதவீத தொழிலாளர்களுடன் அனைத்து தொழில் நிறுவனங்களும் செயல்பட அரசு அனுமதியளிக்க வாய்ப்புள்ளதாகவே தொழில் துறையினர் கருதுகின்றனர்.
இச்சூழலில், சொந்த ஊர்களுக்கு சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் கோவை திரும்ப தொடங்கியுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து நேற்று கோவை வந்த ரயில்களில் ஏராளமான தொழிலாளர்கள் வந்திறங்கினர். பேருந்து வசதி இல்லாததால் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். வடமாநில தொழிலாளர்கள் வருகை தொழில் துறையினர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சி.சிவக்குமார் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “விரைவில் அனைத்து தொழில் நிறுவனங்களிலும் 100 சதவீத பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றே எதிர்பார்க்கிறோம். அப்படி இருக்கும்போது தொழிலாளர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தால் தொழில் துறையினர் உற்பத்தியை வேகப்படுத்த முடியும். தற்போது வடமாநில தொழிலாளர்கள் இரு தினங்களாக திரும்ப தொடங்கியுள்ளனர். தொழில் துறையினருக்கு இது நல்ல விஷயமே” என்றார்.
திருப்பூரை பொறுத்தவரை பின்னலாடை சார்ந்த நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இதில் வடமாநில தொழிலாளர்கள் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
கணிசமான அளவில் வடமாநில தொழிலாளர்கள் ரயில்கள் மூலமாக நேற்று திருப்பூர் வந்ததாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago