சங்கராபுரத்தில் சாலை பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு :

By செய்திப்பிரிவு

சங்கராபுரம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.

சங்கராபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு எண்-5- ல் கள்ளக்குறிச்சி பிரதான சாலை மற்றும் சன்னதி தெரு ஆகிய பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இந்நிலையில் வீட்டு உரிமையாளர்களிடம் குப்பைகளை தரம் பிரித்து வழங்குமாறும், சுற்றுப்புற தெருக்களை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் ஆட்சியர் தர் அறிவுறுத்தினார்.

பின்னர், வளமீட்பு பூங்கா திடல் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.49.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் குப்பைகள் தரம் பிரிக்கப்படும் பகுதிகள், நுண் உரம் தயாரிக்கப்படும் பகுதி மற்றும் மேற்கூரை, சுற்றுச்சுவர் அமைத்தல் ஆகிய பணிகளை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல் பொய்க்குணம் சாலை வரை சாலை அமைக்கும் பணியினையும், ரூ.99 லட்சம் மதிப்பீட்டில்- பிள்ளையார் கோயில் முதல் தீயணைப்பு நிலையம் வரை மற்றும் தியாகராஜபுரம் சாலை முதல் வளமீட்பு பூங்கா வரை தார் சாலை அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தார்.

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.பாண்டலம் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அங்கு மரக்கன்றுகளை ஆட்சியர் தர் நட்டு வைத்தார்.

ஆய்வின் போது சங்கராபுரம் வட்டாட்சியர் எஸ்.சையத்காதர், சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.ரவிச்சந்திரன், இ.செல்லதுரை மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்