கோழித்தீவன மூலப்பொருட்கள் தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பண்ணைகளில் முட்டைக் கோழிக்குஞ்சுகள் வாங்கி வளர்ப்பதை பண்ணையாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர், என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் சுமார் 1000 முட்டைக்கோழிப் பண்ணைகள் உள்ளன. இதில் சுமார் 5 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இவை சத்துணவு திட்டம் மற்றும் தமிழகம், கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரி, விடுதி, சுற்றுலாத்தலங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதால் முட்டை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், முட்டை ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டுள்ளது.
இந்நிலையில், கோழித் தீவனத்துக்குத் தேவையான மூலப்பொருட்களான சோயா, கம்பு, கடலை புண்ணாக்கு, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. இதனால் முட்டை விலையை விட உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. ஒரு முட்டை உற்பத்தி செய்ய 480 காசுகள் செலவாகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஒரு முட்டை 500 காசுகள் என விலை நிர்ணயம் செய்தாலும், தொழில் போட்டி காரணமாக வெளிமார்க்கெட்டில் ஒரு முட்டை 450 காசுகளுக்கு மொத்த விலையில் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஒரு முட்டைக்கு 30 காசுகள் வீதம் இழப்பு ஏற்படுகிறது.
தொடர்ந்து ஏற்படும் வருவாய் இழப்பால், கோழிப்பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். செலவினங்களும் அதிகரித்து வருவதால் ஒரு முட்டை ரூ.5.50-க்கு விற்றால்தான் பண்ணையாளர்களுக்கு வருமானம் கிடைக்கும்.
இந்நிலையில், கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்தில் உள்ள பல கோழிப்பண்ணைகளில் முட்டை உற்பத்தி செய்யக்கூடிய கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்ப்பது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வயதுள்ள கோழிக்குஞ்சுகளை ஹேச்சரியில்இருந்து வாங்கி 25 வாரங்கள் தீவனம் கொடுத்து வளர்த்த பிறகே முட்டையிட தொடங்கும்.
அதுவரை பண்ணையாளர்கள் தீவனத்திற்கு செலவிட வேண்டியுள்ளது. முட்டை கொள்முதல் விலை மேலும் உயர்ந்தால் மட்டுமே கோழிப்பண்ணைகளில் கோழிக்குஞ்சுகள் வளர்ப்பு மீண்டும் தொடங்க முடியும்.
கோழிப்பண்ணைத் தொழிலை காப்பாற்றவும், கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் ஃபுட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (எப்சிஐ) குடோன்களில் இருப்பில் உள்ள உணவுக்கு பயன்படுத்த முடியாத உணவுப் பொருட்களை மானிய விலையில் கோழிப்பண்ணையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago