ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் 629 அரசுப் பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படவுள்ளன.
தமிழகத்தில் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் தளர்வுகளுடன் கூடிய புதிய ஊரடங்கு விதிகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, தொற்று குறைவாக உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 50 சதவீதம் பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து நாளை முதல் தொடங்கவுள்ளன. அதேபோல், கோயில்கள், தேவாலயங்கள் நாளை முதல் திறக்கப்படவுள்ளன. வேலூர் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயக்கப்படவுள்ளது.
புதிய வழிகாட்டு விதிமுறை களின் படி வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக் கழகத்தில் நகரப் பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் என 629 பேருந்துகளை நாளை (திங்கட்கிழமை) முதல் இயக்கவுள்ளனர். இதற்காக, அனைத்து பணிமனைகளில் உள்ள பேருந்துகளையும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதையொட்டி, போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அனைவரும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர நகரங்களில் இயக்கப் படவுள்ள 227 அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘வேலூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் இருந்து வகை 1-ல் உள்ள கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கும் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக் கப்படவில்லை. மற்ற பகுதிகளுக்கு வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும்.
வேலூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பேருந்துகள், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் வழக்கம்போல் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர். வரும் 1-ம் தேதி முதல் பேருந்துகளை இயக்க உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago