கோவை, திருப்பூர் மாவட்டங்களில் - இரு நாட்கள் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு :

By செய்திப்பிரிவு

கோவை, திருப்பூர் மாவட்டங் களில் கடந்த இரு நாட்கள் நடைபெற்ற வருவாய் தீர்வாய முகாம்(ஜமாபந்தி) நேற்று நிறைவடைந் தது.

கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு, அன்னூர், மேட்டுப்பாளையம், கோவை தெற்கு, பேரூர், மதுக்கரை, சூலூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற்றது. 11 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கும், துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரிகள் வருவாய் தீர்வாய அலுவலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். கரோனா தொற்று அச்சத்தால், பொதுமக்கள் நேரடியாக ஜமாபந்தியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஏற்கெனவே அறிவுறுத்தியபடி, இணையம் வழியாக 500-க்கும்மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலிக்கப் பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கிராம கணக்குகளை சார் ஆட்சியர் (பொறுப்பு) மகராஜ் ஆய்வு செய்தார். வாரிசு சான்றிதழ், குடும்பஅட்டை, உட்பிரிவு பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டா, விதவை சான்று மற்றும் முதியோர் ஓய்வூதியம் கேட்டு 44 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த ஜமாபந்திக்கு, மாவட்ட ஆட்சியரும் மாவட்ட வருவாய்த் தீர்வாய அலுவலருமான எஸ். வினீத் தலைமை வகித்தார். அவிநாசி வட்டத்தில் உள்ள 18 கிராமங்களில், பொதுமக்களிடம் இணைய வழி மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் பெறப்பட்ட 209 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார். இதில் ஒவ்வொரு வருவாய் ஆண்டுக்கும், கிராம நிர்வாக அலுவலர் பராமரிக்கும் கிராம கணக்குகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டது.

உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் ஆகிய 3 வட்டங்களுக்கு உட்பட்ட 170 வருவாய் கிராமங்க ளுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

உடுமலையில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல அலுவலர் வாசுகி கலந்துகொண்டு, சின்னவீரம் பட்டி, பெரியகோட்டை, கணக்கம்பாளையம், கண்ணம்ம நாயக்கனூர், குரல்குட்டை, ஆண்டியகவுண்டனூர் உட்பட 78 வருவாய் கிராமங்களின் கணக்குகளை தணிக்கை செய்தார்.

மடத்துக்குளத்தில் நடைபெற்ற ஆய்வில் உடுமலை கோட்டாட்சியர் கீதா கலந்து கொண்டு சங்கராமநல்லூர், கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிபுத்தூர், கணியூர் உள்ளிட்ட 21 வருவாய் கிராமங்களின் கணக்குகளை தணிக்கை செய்தார். தாராபுரம் வட்டத்தில் கலால் உதவி ஆணையர் ரங்கராஜ் தலைமையில் 71 வருவாய் கிராமங்களுக்கான தணிக்கை நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும், ஜமாபந்தி நடந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE