மோகனூர் கரசபாளையம் ஏரியில் காவிரி நீரை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை :

By செய்திப்பிரிவு

விவசாயத்திற்கு பயன்படும் வகையில் கரசபாளையம் ஏரியில் காவிரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகில் உள்ள சர்கார்வாழவந்தி கிராமம், கரசபாளையத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரி உள்ளது.

மழைக்காலங்களில் காவிரி ஆற்றின் உபரி நீரையும், திருமணிமுத்தாறு மற்றும் குமாரபாளையம் வாய்க்காலில் இருந்து வரும் உபரி நீரையும் இந்த ஏரியில் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக நேற்று நடந்த விவசாயிகள் ஆலோசனைக் கூட்டத்தில், பாலப்பட்டி, கொமாரபாளையம் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் கிருஷ்ண சேகர், விவசாய முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் சங்கத்தலைவர் செல்ல ராசாமணி பேசியதாவது:

கரசபாளையம் ஏரி 184 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் நீர் நிரப்பும்போது, 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாக பலன்பெறும். ஏரியைச் சுற்றி 3 முதல் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

எனவே, ஏரியைச் சுற்றியுள்ள நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரசபாளையம் ஏரியில் காவிரி உபரி நீரை நிரப்புவதற்கு கட்சி வேறுபாடு இன்றி முயற்சிக்க வேண்டும். இது குறித்து விரைவில் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்து மனு அளிக்கப்படும். மேலும், இப்பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரியை மூட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மோகனூர் ஒன்றிய பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுப்பிரமணி, மாதேஸ்வரன், வேலுச்சாமி, தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்