வடமாநிலங்களில் இருந்து இதுவரை - 6,086 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகம் வருகை : சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தகவல்

வடமாநிலங்களில் இருந்து இதுவரை 6,086 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில்கள் மூலம் தமிழகம் வந்துள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் இரண்டாம் அலையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று உச்சத்தை தொட்ட நிலையில், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வடமாநிலங்களில் இருந்து தனி ரயில்களில் ஆக்சிஜன் கன்டெய்னர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.

இரண்டு உயர் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு ஒதுக்கப்படும் ஆக்சிஜன்களை அனுப்பி வைத்தனர். ரயில்களில் வரும் ஆக்சிஜன் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களில் இறக்கப்பட்டு, அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்துக்கு இதுவரை 80 தனி ரயில்களில் 6,086 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து கோவை அருகே இருகூருக்கு 80-வது லோடு ஆக்சிஜன் ரயிலில் வந்தது. நான்கு கன்டெய்னர்களில் வந்த 76.41 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, மாநில சுகாதாரத்துறை வசம் ரயில்வே நி்ரவாகம் ஒப்டைத்தது. கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE